தலையில் மின்விசிறி விழுந்து படுகாயம்; அரசு ஆஸ்பத்திரிக்கு தங்கையை பார்க்க வந்தவருக்கு நேர்ந்த சோகம்..!
|ஆலப்புழா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தங்கையை பார்க்க வந்தவர் தலைமீது மின்விசிறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
பாலக்காடு:
கேரளா மாநிலம் ஆலப்புழா நகரில் தகளி பகுதியில் வசிப்பவர் அஜேஸ் (வயது 49). இவர்களுடைய தங்கை ஆலப்புழா உள்ள அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை இவர் தனது தங்கையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். அங்கு வந்து அவர் தன் தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த அறையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி கழண்டு அங்கு நின்று கொண்டிருந்த அஜேஸ் தலை மீது பயங்கரமாக விழுந்தது. இதில் அவர் தலையில் படுகாயமடைந்து அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருடைய தலையில் 13 தையல்கள் போடப்பட்டு உள்ளது.
விவரமறிந்த மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதேபோல் எல்லா அறையிலும் மின்விசிறிகள் விழக்கூடிய நிலையில் இருப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளார்கள். இவை அனைத்தையும் சரி செய்யப்படும் என பணியில் இருந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.