உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று - ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
|உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சமர்கண்ட்,
உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார்.அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் இன்று பேசிய பிரதமர் மோடி, 70 ஆயிரம் ஸ்டார்ட்-அப்களை உள்ளடக்கிய இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று என தெரிவித்தார். மக்களை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரியில் இந்தியா கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது:
இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம். ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இன்று நம் நாட்டில் 70,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களும் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களும் உள்ளன.
எங்கள் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியானது தொழில்நுட்ப செயல்திறனிலும் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் எங்களுடையது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.