பணியின் போது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; கர்நாடக அரசு உத்தரவு
|பணியின் போது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், நிலமும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கடந்த 15-ந் தேதி பெங்களூருவில் நடந்த சுதந்திர தினவிழாவின் போது கர்நாடகத்தில் பணியின் போது வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்திருந்தார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது பணியின்போது வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க மந்திரிசபை அனுமதி வழங்கி உள்ளது.
இதுபற்றி மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தில் பணியின் போது வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், நிலமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு மரணம் அடைந்த 400 பேரில், 200 பேர் அரசு வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ரூ.25 லட்சம், நிலம் கொடுப்பதற்கு பதிலாக அரசு வேலை கொடுப்பதன் மூலம், ராணுவ வீரர்களின் குடும்பத்தின் எதிர்காலம் எப்போதும் பாதுகாப்புடனும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.