< Back
தேசிய செய்திகள்
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடும் கண்டனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்'' முறை: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடும் கண்டனம்

தினத்தந்தி
|
18 Sept 2024 8:34 PM IST

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்'’நடைமுறை சாத்தியமற்றது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன்மூலம், மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இதில் மக்களவை - சட்டசபைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமற்றது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறை கூட்டாட்சிக் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்ல, நடைமுறையில் செயல்படுத்த சாத்தியம் இல்லாதது. எதிர்க்கட்சிகளுடன் எந்தவித ஆலோசனையும் இன்றி, இதனை அவசரமாக ஒப்புதல் வழங்கியிருப்பது பிரதமர் மோடி அரசின் வன்ம நோக்கத்தை வெளிக்காட்டுகிறது.

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது, பணவீக்கம் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் அவதிப்படுகின்றனர். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளன. இந்த அழுத்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக. , பிரதமர் தனது தோல்விகளை மறைக்க 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற வித்தை மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

ஒரு அரசாங்கத்தின் முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிய அடிப்படை அறிவு கூட மையத்திற்கும் பிரதமருக்கும் இல்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்