வாக்காளர் தகவல்களை திருடிய விவகாரம்: சிலுமே நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
|பெங்களூருவில், வாக்காளர் தகவல்களை திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு:
வாக்காளர் தகவல் திருட்டு
பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை சிலுமே என்ற தனியார் நிறுவனம் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அல்சூர்கேட், காடுகோடி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. வாக்காளர்கள் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் மந்திரிக்கு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிலுமே நிறுவனத்தில் அல்சூர்கேட் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அங்கு இருந்த சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். இதற்கிடையே சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார், நிறுவனத்தை சேர்ந்த கெம்பேகவுடா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
கெம்பேகவுடா கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவிக்குமார், கெம்பேகவுடாவின் மனைவிகளிடம் அல்சூர்கேட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருந்தனர். முதலில் கெம்பேகவுடா எங்கு இருக்கிறார் என்று தெரியாது என அவரது மனைவி தெரிவித்து இருந்தார். ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நெலமங்களாவில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருப்பதாக கூறினார். இதனால் நெலமங்களாவுக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அங்கிருந்து கெம்பேகவுடா தப்பி சென்று விட்டார்.
அவர் துமகூருவில் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கேயும் போலீசார் சென்று இருந்தனர். ஆனால் அங்கும் அவர் போலீசாரிடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா பகுதியில் கெம்பேகவுடா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து கெம்பேகவுடா தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி கணக்குகள் முடக்கம்
இதற்கிடையே இந்த வழக்கில் சிலுமே நிறுவன ஊழியர்கள் ரேணுகா பிரசாத், தர்மேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்களை நேற்று பெங்களூரு 27-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ரவிக்குமாரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் நேற்றும் நெலமங்களாவில் உள்ள ரவிக்குமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். மேலும் சிலுமே நிறுவனத்தின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி உள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரவிக்குமார் கைது செய்யப்பட்டால் தான் அவர் செய்த முறைகேடு பற்றி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.