"புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம்" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
|இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் இதர வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் 5 புதிய திட்டங்களை மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதுப்பற்றி அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் போதிய வாய்ப்புகளை உருவாக்கும் அரசாங்கத்தின் 9 முதன்மை முன்னுரிமைகளில் 'வேலைவாய்ப்பு மற்றும் திறன்' ஒன்றாகும்.
அதன்படி ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டு காலத்தில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மற்றும் இதர வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் பிரதமரின் 5 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் தொகுப்பை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த திட்டங்கள் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரையும் ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் ஆகியவற்றிற்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முதல்முறை தொழிலாளர்களுக்கான புதிய திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் அரசு ஊதியம் வழங்கப்படும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்த இளைஞர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்கும்.
இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் 2.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவார்கள்.
'உற்பத்தித் துறையில் வேலை உருவாக்கம்' திட்டத்தின் கீழ், முதல் முறையாக பணி புரியும் ஊழியர்களின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை அரசாங்கம் ஊக்குவிக்கும்.
வேலைவாய்ப்பின் முதல் 4 ஆண்டுகளில் அவர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிபங்களிப்பு தொடர்பாக ஊழியர் மற்றும் முதலாளி இருவருக்கும் நேரடியாக குறிப்பிட்ட அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள்.
'முதலாளிகளுக்கு ஆதரவு' என்பது ஒரு முதலாளியை மையமாகக் கொண்ட திட்டமாகும், இது அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை உள்ளடக்கும்.
மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் உள்ள அனைத்து கூடுதல் வேலைவாய்ப்புகளும் கணக்கிடப்படும். ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிபங்களிப்புக்காக அரசாங்கம் 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வரை முதலாளிகளுக்கு திருப்பிச் செலுத்தும். இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க ஊக்குவிப்பு நிதியிலிருந்து உத்தரவாதத்துடன் ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்களை எளிதாக்குவதற்கு 'மாதிரி திறன் கடன் திட்டம்' மாற்றியமைக்கப்படும். இந்த நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் 25,000 மாணவர்களுக்கு உதவும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.