டெல்லி அருகே மதுபானக் கடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்
|டெல்லி அருகே மதுபானக் கடையில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
குருகிராம்,
டெல்லி அருகே உள்ள குருகிராம் பாஞ்ச்கோன் பகுதியில் ஒரு மதுபானக் கடை அமைந்திருக்கிறது.
இங்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஏராளமானவர்கள் திரண்டிருக்க, விறுவிறுப்பாக விற்பனை நடந்துகொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள், 15 தடவைக்கு மேல் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், மதுபானம் வாங்க வந்திருந்த 3 பேர் குண்டு காயம் அடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த மதுபானக் கடையின் உரிமையாளரான குல்தீப் சிங், தனக்கு சில நாட்களுக்கு முன் ஒரு வெளிநாட்டு எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மதுபானக்கடையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மிரட்டினார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்பும் தனக்கு அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. துப்பாக்கிச் சூட்டுக்கு தான்தான் காரணம், கடையை கொடுக்காததால்தான் இது நடந்தது என அதில் பேசியவர் கூறினார்.
மதுபானக் கடைக்காரரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்மநபர்களை தேடிவருகின்றனர்.