'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' - ஜி20 கருப்பொருளை வெளியிட்டார் பிரதமர் மோடி!
|இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
புதுடெல்லி,
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை இந்தியா இந்த பொறுப்பில் இருக்கும். இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்."ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்பதே 2023ஆம் ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டிற்கான இந்தியாவின் தாரகமந்திரமாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:- "இந்தியா ஜி20 அமைப்பின் தலைமையை ஏற்க இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'வசுதைவ் குடும்பகம்', உலகத்தின் மீது இந்தியா காட்டும் கருணையின் அடையாளம்.
உலகத்தை ஒன்றிணைப்பதில் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் தாமரை சித்தரிக்கிறது.'ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டம்' என்பதை முன்னிறுத்திக் கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சிக்கு, இந்தியா தலைமை தாங்கியது.
அதேபோல, 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருள் கொண்டு உலகளாவிய சுகாதார முயற்சியை இந்தியா வலுப்படுத்தியது.இப்போது ஜி20க்கான இந்தியாவின் கருப்பொருள், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதாகும்" என்று கூறினார்.