ராகுல் காந்திக்கு என தனி நாடு வேண்டும் என்று காங்கிரஸ் ஒரு நாள் கேட்கும்... பா.ஜ.க. எம்.பி. பேட்டி
|ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை கிடையாது என பா.ஜ.க. எம்.பி. தீபக் பிரகாஷ் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், லண்டன் நகரில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவின் ஜனநாயகம் பற்றி பேசினார்.
இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படுவதற்கான எந்த விசயங்களையும் செய்யவில்லை. ஆனால், அவை இந்தியாவிடம் இருந்து வர்த்தகமும், பணமும் பெற்று கொள்கிறது என ராகுல் காந்தி பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அவர் இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார். இந்நிலையில், அவதூறு வழக்கு ஒன்றில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதன் தொடர்ச்சியாக, வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. நாடாளுமன்றத்திற்கு வெளியே, காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் பா.ஜ.க. தலைவர் மற்றும் அக்கட்சியின் எம்.பி.யான தீபக் பிரகாஷ் இன்று அளித்த பேட்டியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் மற்றும் அக்கட்சிக்கும் நாட்டின் அரசியல் சாசனம் மீது நம்பிக்கை கிடையாது.
ஜனநாயகம் மீதோ அல்லது நாட்டின் நீதிமன்ற அமைப்பு மீதோ அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மீதோ, நாட்டு மக்கள் மீதோ நம்பிக்கை கிடையாது. அதன்பின்னர் காங்கிரஸ் கட்சி ஒரு நாள், அவர்களது தலைவர் ராகுல் காந்திக்கு என்று தனியாக ஒரு நாடு வேண்டும் என கேட்கும் போல் தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளார்.