கேரளாவில் பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
|நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு கேரள போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் பா.ஜ.க. மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது.
ரஞ்சித் ஸ்ரீனிவாசை கொலை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிபதி விஜி ஸ்ரீதேவிக்கு அடையாளம் தெரியாத நபர் ஆன்லைன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அவருக்கு கேரள போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக 2 பேர் காவலில் இருப்பதாகவும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.