< Back
தேசிய செய்திகள்
ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் வெளியீடு: முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிப்பு நிதி மந்திரி தகவல்
தேசிய செய்திகள்

ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் வெளியீடு: முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிப்பு நிதி மந்திரி தகவல்

தினத்தந்தி
|
28 July 2022 8:55 AM IST

ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை வெளியிட்டு, முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படும் என நிதித்துறை மந்திரி அறிவித்து உள்ளார்.

பெரும்பாவூர்,

கேரளாவில் வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாநில அரசின் லாட்டரி இயக்குனரகம் சார்பில், ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் வெளியீடும் விழா திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் நடைபெற்றது. நிதித்துறை மந்திரி கே.என்.பாலகோபால், போக்குவரத்துத்துறை மந்திரி ஆண்டனி ராஜு ஆகியோர் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை வெளியிட்டனர்.

விழாவில் லாட்டரி துறை இயக்குனர் பி.கே.சையது முகம்மது மற்றும் டீ.சுரேஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் நிதித்துறை மந்திரி கே.என்.பாலகோபால் கூறியதாவது:- கடந்த ஆண்டு ஓணம் பம்பர் டிக்கெட்டின் முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்பட்டது. தற்போது பரிசு தொகை உயர்த்தப்பட்டு ரூ.25 கோடி முதல் பரிசாக வழங்கப்படும். லாட்டரி டிக்கெட் விலை ரூ.300 இருந்தது. அதன் விலை ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 10 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ஓணம் பம்பர் பரிசு சீட்டு குலுக்கல் வருகிற செப்டம்பர் 18-ந் தேதி நடைபெறுகிறது. .முதல் பரிசாக ஒரு நபருக்கு ரூ.25 கோடி, 2-வது பரிசாக ஒரு நபருக்கு ரூ.5 கோடி, 3-வது பரிசாக ரூ.ஒரு கோடி வீதம் 10 பேருக்கும், 4-வது பரிசாக ரூ.ஒரு லட்சம் வீதம் 90 பேருக்கும் வழங்கப்படும். மேலும் வழக்கமாக வழங்கப்படும் ரூ.5000 தலா 72 ஆயிரம் பேருக்கும், ரூ.3000 தலா 48,600 பேருக்கும், ரூ.2000 தலா 66,600 பேருக்கும், ரூ.ஆயிரம் தலா 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கும் குலுக்கல் மறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஓணம் பம்பர் பரிசு குலுக்கலுக்கு 54 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால், 30 லட்சம் டிக்கெட்டுகளை அச்சடித்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்