தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள் பயணம்
|பிரதமர் மோடி 4 நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். 'பிரிக்ஸ்' மாநாட்டில் அவர் சீன அதிபரை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனாமற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.
'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
இந்த அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.கொரோனா காரணமாக கடந்த 2019-ம் ஆண்டுக்குப்பின் இந்த மாநாடு காணொலி மூலமாகவே நடைபெற்று வந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்திருப்பதால், நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது.இந்த உச்சி மாநாட்டில்பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்று பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
திட்டங்கள் குறித்து ஆய்வு
இதற்காக நாளை மறுநாள் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். ஜோகன்னஸ்பர்க்கில் 3 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, முதலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, பிரிக்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.மேலும் எதிர்காலத்தில் திட்டங்களை வகுக்க வேண்டிய துறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.இந்த மாநாட்டை தொடர்ந்து அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
தலைவர்களுடன் சந்திப்பு
குறிப்பாக, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் 'பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்' நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார்.அத்துடன், இந்த மாநாட்டுக்காக ஜோகன்னஸ்பர்க் வரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் மாநாட்டுக்கு இடையிடையே தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அந்தவகையில் தென்ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. அவர் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.மேலும் அவரது பிரதிநிதியாக ரஷிய வெளியுறவுமந்திரி செர்ஜய் லவ்ரோவ் நேரில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீன அதிபர் ஜின்பிங்
அதேநேரம் சீன அதிபர் ஜின்பிங் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்ஆப்பிரிக்கா செல்கிறார்.எனவே பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்திக்கலாம் என கூறப்படுகிறது.லடாக் மோதலுக்குப்பின் இந்தியா-சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு நிகழுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளை தவிர மேலும் ஏராளமான நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது..
ஆப்பிரிக்க நாடுகள்
குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற நாடுகளின் தலைவர்களுக்கும், வங்காளதேசம், ஈரான், இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.அதன்படி மேற்படி ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.இந்த நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கிரீஸ் புறப்படுகிறார்
இவ்வாறு தென்ஆப்பிரிக்காவில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 25-ந்தேதி கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, அங்கும் பல்வேறு நிகழ்வுகளில்பங்கேற்கிறார்.இதில் முக்கியமாக அந்த நாட்டு பிரதமருடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது இந்தியா-கிரீஸ் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.மேலும் இரு நாடுகளை சேர்ந்த வர்த்தக தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். அத்துடன் கிரீசில் வாழும் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாடுகிறார்.
40 ஆண்டுகளில் முதல்முறை
இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டுக்கு செல்வது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை ஆகும். இந்தியா-கிரீஸ் இடையே நாகரிக காலம் முதலே உறவுகள் இருந்து வருவதாக கூறியுள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், அது சமீப காலமாக கடல்வழி போக்குவரத்து, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் மூலம் மேலும் வலுப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.