டெல்லியில் 'அனைவருக்கும் ஆரோக்கியம்' நடைபயணம் - மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நடந்தது
|உலக சுகாதார தினத்தையொட்டி டெல்லியில் ‘அனைவருக்கும் ஆரோக்கியம்' நடைபயணம், மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நடந்தது.
புதுடெல்லி,
உலக சுகாதார தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நல்ல ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைநகர் டெல்லியில் 'அனைவருக்கும் ஆரோக்கியம்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் உள்பட 350-க்கும் அதிகமான மக்கள் மந்திரியுடன் இந்த நடை பயணத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் மத்திய டெல்லியில் உள்ள விஜய் சவுக்கிலிருந்து நிர்மான் பவன் வரை கார்தவ்யா பாதை மற்றும் இந்தியா கேட் வழியாக நடைபயணம் சென்றனர். நடைபயணத்தில் பங்கேற்ற அனைவரும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மனநோய் மற்றும் புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான உடல்நல பிரச்சினைகளை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுத்தனர். அதை தொடர்ந்து நடைபயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மன்சுக் மாண்டவியா நன்றி தெரிவித்தார்.