முகரம் பண்டிகையையொட்டி உப்பள்ளி-தார்வாரில் மதுபான விற்பனைக்கு தடை
|முகரம் பண்டிகையையொட்டி உப்பள்ளி-தார்வாரில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உப்பள்ளி-
உப்பள்ளி-தார்வாரில் நாளை (வெள்ளிக்கிழமை) முகரம் பண்டிகையை முஸ்லிம்கள் வெகுசிறப்பாக கொண்டாட முடிவு ெசய்துள்ளனர். அதன்படி உப்பள்ளி புத்தவிகார் ரோட்டில் உள்ள தர்கா, பழைய உப்பள்ளியில் உள்ள பெரிய தர்கா, யமனூர் குடியால் பகுதியில் உள்ள முஸ்லிம் தர்காவில் முகரம் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடக்கிறது.
இந்த தர்காக்களில் தொழுகையில் இந்துக்களும், முஸ்லிம்களும் புத்தாடை அணிந்து கலந்து கொள்வது வழக்கம். தொழுகை முடிந்ததும் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை கூறி கொள்வார்கள். பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை 2 சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் முகரம் பண்டிகையையொட்டி, அங்கு எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உப்பள்ளி-தார்வாரில் முகரம் பண்டிகையையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க போலீசார் மதுபானக்கடைகளுக்கு தடை விதித்துள்ளனர். அதாவது நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 31-ந் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.