தசரா பண்டிகையையொட்டி தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை
|தசரா பண்டிகையையொட்டி தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அளித்து மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்துள்ளார்.
மங்களூரு: தசரா பண்டிகையையொட்டி தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அளித்து மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்துள்ளார்.
தசரா விழா
நவராத்திரியையொட்டி உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா, வருகிற 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா உள்ளிட்ட இடங்களில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத், பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசிடம் தசரா பண்டிகை, வெங்கடரமணசாமி கோவில் ேதரோட்டம் உள்ளிட்ட பண்டிகைகளுக்காக தட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் மந்திரி பி.சி.நாகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
தசரா பண்டிகை, மங்களூரு வெங்கடரமணா சாமி கோவில் தேரோட்டம், மங்களா தேவி கோவில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதன்காரணமாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் வருகிற 26-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை 15 நாட்கள் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதேபோல் உடுப்பியில் அடுத்தமாதம்(அக்டோபர்) 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 14 நாட்கள் தசரா விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையாகும்.
தட்சிண கன்னடாவில் எம்.எல்.ஏ. வேண்டுகோளின்படி விடுமுறை நாட்கள் மாற்றப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு ஏற்ப விடுமுறையை மாற்றி அமைக்க மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் விடுமுறை காரணமாக மாணவர்களின் படிப்புக்கு எந்த பாதிப்பு ஏற்படாதவாறும் பார்த்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.