< Back
தேசிய செய்திகள்
கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி   சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
தேசிய செய்திகள்

கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
23 Jun 2023 6:45 PM GMT

மைசூரு-

கன்னட ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

மைசூரு அருகே உள்ள சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மைசூரு மாவட்டம் இன்றி வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்தநிலையில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பெண்கள் கூட்டம் விடுமுறை நாட்களில் குவிந்து வருகிறது. ஆண்டுதோறும் தசரா மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று, கன்னட ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தன. அம்மன் சிலை தங்கம், வைரங்களால் அலங்கரிக்கப்ட்டு இருந்தது. இதனை காண அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.

முதியவர்கள் நேரடி தரிசனம்

இந்தநிலையில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்பட மாநிலத்தில் உள்ள இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதனால் நேற்று சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்த 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்தனர்.

வயதானவர்களுக்கு உதவி செய்ய சிறப்பு மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் முதியவர்களை கோவிலுக்கு நேரடியாக சாமி தரிசனம் செய்ய உதவி செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் பக்தர்கள் சாமுண்டி மலைக்கு வாகனங்களில் செல்வதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது.

அரசு பஸ்கள் ஏற்பாடு

சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தவர்களுக்கு லலிதா பேலஸ் மகால் பின்புறம் உள்ள மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் அங்கிருந்து அரசு பஸ் மூலம் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றனர். மைசூரு உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு ெஹலிபேட் மைதானத்தில் இருந்து 40 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சாமுண்டி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கன்னட ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சாமுண்டீஸ்வரி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்