< Back
தேசிய செய்திகள்
ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் உள்ளிட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் - ப.சிதம்பரம்
தேசிய செய்திகள்

ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் உள்ளிட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும் - ப.சிதம்பரம்

தினத்தந்தி
|
21 Oct 2022 2:42 AM GMT

மோடி அரசு எப்போதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் கடும் விமர்சனங்களை கூறினர்.

புதுடெல்லி,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியாக, நேற்று ரூ.83.06 என்ற நிலையை எட்டியது.

இந்நிலையில், மோடி அரசு எப்போதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது, பொருளாதார விவகாரங்களில் கவனம் செலுத்தவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கடும் விமர்சனங்களை கூறினர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி விவகாரத்தில் தீர்வு காண பிரதமர் மோடி உடனடியாக நிபுணர்களுடன் கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இந்த விவகாரத்தில் உதவியற்ற அரசாங்கமாக தெரிகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதால், பணவீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் வட்டி விகிதங்கள் தீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது.

டாக்டர் எஸ் ரங்கராஜன், டாக்டர் ஒய்வி ரெட்டி, டாக்டர் ராகேஷ் மோகன், டாக்டர் ரகுராம் ராஜன் மற்றும் திரு மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற நிபுணர்களுடன் பிரதமர் மோடி உடனடியாக கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டார்.

இந்திய ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி என்பது, இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதை நிரூபிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

காங்கிரஸ் தலைவர் அன்ஷுல் அவிஜித் கூறுகையில், "திறமையற்ற மோடி அரசு பொருளாதார மேலாண்மை பற்றி துப்பில்லாமல் உள்ளது. பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடி தான் பேசியதை முற்றிலும் மறந்துவிட்டார்.

ஆகஸ்ட் 20, 2013 அன்று குஜராத் முதல் மந்திரியாக அவர் இருந்தபோது அவர் கூறிய வார்த்தைகள்- 'நாட்டின் பாதுகாப்பு குறித்தும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது குறித்தும் டெல்லியில் உள்ள தலைமை கவலைப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது' என்று பேசியிருந்தார்.

அதேபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொறுப்பற்ற மற்றும் தவறான அறிக்கைகளால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது குறித்த விவகாரத்தில், இந்த அரசாங்கத்தின் தோல்வியின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.

சிறிய மக்கள்தொகை மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ந்த நாடுகள் உடன் அவர் இந்தியாவை ஒப்பிடுவது தவறானது" என்று காங்கிரஸ் தலைவர் அன்ஷுல் அவிஜித் கடும் விமர்சனங்களை கூறினார்.

மேலும் செய்திகள்