< Back
தேசிய செய்திகள்
மும்பையை கர்நாடகம் உரிமை கோருவதா..? - மராட்டிய சட்டசபையில் கடும் கண்டனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மும்பையை கர்நாடகம் உரிமை கோருவதா..? - மராட்டிய சட்டசபையில் கடும் கண்டனம்

தினத்தந்தி
|
29 Dec 2022 2:19 AM IST

மும்பையை உரிமை கோரிய கர்நாடக தலைவர்களுக்கு மராட்டிய சட்டசபையில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.

மும்பை,

மராட்டிய- கர்நாடக எல்லைப் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே கர்நாடக மாநில பா.ஜனதா முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி, மும்பை கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமானது என்று பேசி குண்டை தூக்கி போட்டார். மேலும் கர்நாடக மந்திரி மது சுவாமி, மும்பையை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக அரசியல் தலைவர்களின் இந்த பேச்சு விவகாரம் நேற்று மராட்டிய சட்டசபையில் எதிரொலித்தது. இதுதொடர்பாக மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆவேசமாக பேசியதாவது:-

சகித்து கொள்ள முடியாது

மும்பை நகரம் மராட்டியத்துக்கு சொந்தமானது. அது யாருடைய தந்தையின் சொத்தும் அல்ல. கர்நாடக தலைவர்களின் கருத்துகள் அமித்ஷா கூறிய அறிவுரைகளுக்கு முரணாக உள்ளது.

மும்பை மீது உரிமை கோருவதை நாங்கள் சகித்து கொள்ள மாட்டோம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற மோசமான அறிக்கைகளை கண்டித்து கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப்புவோம்.

மேலும் கர்நாடக அரசு மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

இதுபோன்று மோசமாக பேசும் 'மோட்டார் வாய்'களை கண்டிக்க மத்திய மந்திரி அமித்ஷாவிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்