ஆன்லைனில் படிப்பதற்காக மலை உச்சிக்கு சென்ற 3 மாணவர்கள் மின்னல் தாக்கி காயம்
|ஒடிசாவில் ஆன்லைனில் படிப்பதற்காக மலை உச்சிக்கு சென்ற 3 மாணவர்கள் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.
கந்தமால்,
ஒடிசாவில் 3 மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதற்காக அருகிலுள்ள மலை உச்சிக்கு சென்றனர். அங்கு படித்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.
மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 185 கிமீ தொலைவில் உள்ள முண்டகம் கிராமத்தில் இணைய இணைப்பு இல்லாத காரணத்தால் மாணவர்கள் நேற்று பிற்பகல் ஆன்லைனில் படிப்பதற்காக மலை உச்சிக்கு சென்றனர்.
மலை உச்சிக்கு சென்றால் தான் இணைய இணைப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் அங்கு சென்றனர். இந்த நிலையில் மாலையாகியும் மாணவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் அவர்களைத் தேடிச் சென்றபோது, மூவரும் மலையுச்சியில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதையடுத்து மாணவர்கள் மூவரையும் அருகில் உள்ள பிரம்மன்பாடாவில் உள்ள பொது சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஒரு மாணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மூவரும் புல்பானியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கந்தமால் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் மோனோஜ் உபாதே தெரிவித்தார். மாணவர்கள் தீரன் திகல் (17), பிங்கு மல்லிக் (17), பஞ்சனன் பெஹெரா (18) என அடையாளம் காணப்பட்டனர்.