ஒலிம்பிக், நண்பர்களுடன் உணவு; பெண் டாக்டர் பலாத்காரம்-கொலைக்கு முன் நடந்தது என்ன?
|மேற்கு வங்காளத்தில் பலாத்கார சம்பவத்தின்போது பெண் டாக்டருடன் இரவு பணியில் இருந்த 4 மருத்துவ நண்பர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் நடப்பதற்கு முன் வியாழனன்று (8-ந்தேதி) இரவில், பாரீஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றபோது நடந்த ஈட்டி எறியும் போட்டியை பெண் டாக்டர் கண்டு களித்து இருக்கிறார்.
அவருடன் சக மருத்துவர்கள் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு பணியில் இருந்துள்ளனர். ஒன்றாக அமர்ந்து ஒலிம்பிக்கை பார்த்தபடியே, ஆன்லைன் வழியே ஆர்டர் செய்து வரவழைத்த இரவு உணவையும் சாப்பிட்டு இருக்கின்றனர்.
இதன்பின், அந்த பெண் டாக்டர் அவருடைய தாயாரை தொலைபேசி வழியே அழைத்து பேசியிருக்கிறார். இரவு உணவு முடிந்ததும், சக மருத்துவர்கள் வேலைக்காக அவரவர்களின் பணியிடங்களுக்கு சென்று விட்டனர். பெண் டாக்டர் படிப்பதற்காக கருத்தரங்கு அறையில் தங்கி விட்டார்.
அப்போது, அவர் சிறிது நேரம் தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணியளவில் அவசரகால கட்டிடத்திற்குள் சஞ்சய் ராய் நுழைந்திருக்கிறார். அடுத்த நாள் காலை 7.30 மணியளவில் பெண் டாக்டரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற விசயமும் மறுப்பதற்கில்லை என போலீஸ் ஆணையாளர் வினீத் கோயல் கூறியுள்ளார். இதற்காக, உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்பு கொண்டு டாக்டர்கள் தகவல் தெரிவிக்கலாம். நேரிலும் வந்து தகவலை கூறலாம்.
எவர் மீதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதனை பற்றியும் தெரிவிக்கலாம். குற்றவாளிகள் நிறைய பேர் என்றால், அடுத்த 4 முதல் 5 நாட்களில் அது தெரிந்து விடும். அவர்களை கைது செய்து விடுவோம் என அவர் கூறியுள்ளார்.
போலீசார் வருகிற ஞாயிற்று கிழமைக்குள் விசாரணையை நிறைவு செய்யவில்லை என்றால், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நர்சுகள், நண்பர்கள் இருந்தபோதும் எப்படி இந்த சம்பவம் நடந்தது? என்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.