பிரம்மாவரில் முதியவர் அடித்து கொலை
|பிரம்மாவரில் முதியவரை அடித்து கொலை செய்த அவரது மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு-
பிரம்மாவரில் முதியவரை அடித்து கொலை செய்த அவரது மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முதியவர் கொலை
உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா பெஜமங்கூர் அருகே மொகவீரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தா. கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகாசினி. ஆனந்தாவின் தந்தை சாது மரக்கலா (வயது 65). இந்த நிலையில் ஆனந்தா மற்றும் சாது மரக்கலா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், சுகாசினி நேற்று முன்தினம் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் சாது மற்றும் ஆனந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்தா, தந்தை சாதுவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சாது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆனந்தா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
மகனுக்கு வலைவீச்சு
இதற்கிடையே, சாது வீட்டின் அருகே இறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சுகாசினிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் பிரம்மாவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் கொலையான சாதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சாதுவை அவரது மகன் ஆனந்தா அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரம்மாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.