கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர் வாடகை ஆட்டோக்களுக்கு தடை
|கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து போக்குவரத்து துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து போக்குவரத்து துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூல் புகார்
கர்நாடகத்தில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செல்போன் செயலி மூலம் வாடகை கார்களை முன்பதிவு செய்து இயக்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் இந்த சேவையில் ஆட்டோக்களையும் இணைத்துள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் குறைந்தபட்சமாக 2 கிலோ மீட்டர் பயணிப்பதற்கு ரூ.30 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
மேலும் கூடுதல் தொலைவிற்கு கிலோமீட்டருக்கு ரூ.15 வீதம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த வாடகை ஆட்டோக்ளில் குறைந்தபட்சமாக ரூ.100 வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கும், போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலுவுக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா வேண்டுகோள் விடுத்தார்.
ஆட்டோக்கள் இயக்க தடை
இந்த நிலையில் கர்நாடக போக்குவரத்து துறை சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகைக்கு கார்களை மட்டுமே இயக்க மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனங்கள் அனுமதி இன்றி ஆட்டோக்களை வாடகை சேவையில் ஈடுபடுத்தி வருகிறது. இது சட்டப்படி குற்றம்.
எனவே அடுத்த மூன்று நாட்களுக்குள் பெங்களூருவில் இந்த நிறுவனங்கள் வாடகை சேவையில் ஈடுபடுத்தி வரும் ஆட்டோக்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த ஆட்டோக்களை வாடகையில் ஈடுபடுத்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
புதிய நடைமுறை
இதுகுறித்து பெங்களூரு ஆட்டோ சங்கத்தினர் கூறுகையில் பெங்களூருவில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நம்ம யாத்திரி என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இந்த செயலி மூலம் ஆட்டோக்களை வாடகைக்கு பதிவு செய்ய முடியும் எனவும் கூறினர். மேலும் இந்த நடைமுறை அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அவர்கள் கூறினர்.