அடிக்கடி தனிமையில் சந்திப்பு: மனைவியின் கள்ளக்காதலால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி..
|கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது பெண் ஒருவர் போலீசில் வரதட்சணை புகார் அளித்துள்ளார்.
கோலார் தங்கவயல்,
கர்நாடகம் மாநிலம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை மாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 32). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் வேலைக்கு சென்ற சுதாகர் 6 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வருவார். இதற்கிடையில் விமலாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சுதாகர் சிங்கப்பூரில் இருந்ததால் அவருக்கு இது தெரியவில்லை. இருப்பினும் சுதாகரின் குடும்பத்தினருக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. அவர்கள் சுதாகரிடம் இதுகுறித்து கூறினர். உடனே சுதாகர் மனைவி விமலாவை அழைத்து எச்சரித்தார். ஆனால் விமலா கேட்கவில்லை. கணவர் சிங்கப்பூரில் இருப்பதால் தெரியவா போகிறது என்று தனது கள்ளக்காதலனை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தார்.
இதனால் கோபம் அடைந்த சுதாகரின் குடும்பத்தினர், விமலாவை நேரடியாக கண்டித்தனர். இது விமலாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விமலா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக ஆண்டர்சன்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுதாகர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுதாகர் ஊருக்கு திரும்பினார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த விமலா, கணவனை அவதூறாக பேசியுள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசாரை கொண்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட சுதாகர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலை சுதாகர் கண்டித்ததால் அவர் மீது மனைவி போலீசில் வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக கூறி, நெருக்கடி கொடுத்தது தெரியவந்தது. இதனால் சுதாகர் தற்கொலை முயற்சி செய்திருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சுதாகரின் குடும்பத்தினர் கூறுகையில், விமலாவை, சுதாகர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் சுதாகருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. அங்கு சென்ற சுதாகர் 6 மாதங்களுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்வார். விமலாவுக்கும், வேறு ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை நாங்கள் கண்டித்தோம்.
இதனால் எங்கள் மீது விமலா வரதட்சணை புகார் அளித்து போலீசாரை கொண்டு நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் சுதாகர் மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.