< Back
தேசிய செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடித்த அதிகாரிகள்.. தொண்டர்கள் அதிர்ச்சி
தேசிய செய்திகள்

ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடித்த அதிகாரிகள்.. தொண்டர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
16 Jun 2024 2:16 AM IST

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஜே.சி.பி. எந்திரம் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

ஐதராபாத்,

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தமுள்ள 175 இடங்களில் வெறும் 11 தொகுதிகளை மட்டுமே வென்றதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

ஜெகன்மோகன் ரெட்டியின் வீடான 'தாமரை குளம் இல்லம்', ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இவர் முதல்-மந்திரியாக இருந்ததால் அவரது வீட்டின் காம்பவுண்டு சுவரை ஒட்டி பாதுகாப்பு போலீசாருக்கு என அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கட்டுமானம் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டுக்கு முன்புறம் தரை ஓடுகள் பதிக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் கட்டப்பட்டிருந்த அந்த சட்ட விரோத கட்டுமானங்களை அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த கட்டுமானத்தை அதிகாரிகள் இடித்தனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கட்டுமானங்களை அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்