< Back
தேசிய செய்திகள்
பாரத் ஜோடோ யாத்திரையின்போது அவமரியாதை.. காங்கிரசில் இருந்து விலகிய ராதிகா கேரா பரபரப்பு குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

பாரத் ஜோடோ யாத்திரையின்போது அவமரியாதை.. காங்கிரசில் இருந்து விலகிய ராதிகா கேரா பரபரப்பு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
6 May 2024 5:02 PM IST

காங்கிரஸ் கட்சியின் இந்து எதிர்ப்பு சித்தாந்தத்தை நான் பின்பற்றாததால் கட்சி தலைமை என்னை புறக்கணித்தது என ராதிகா கேரா தெரிவித்தார்.

ராய்ப்பூர்:

சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவரும், கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளருமான ராதிகா கேரா, கட்சியில் இருந்து நேற்று விலகினார். கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வெளியேறினார்.

இந்நிலையில், ராதிகா கேரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் மீதும் கட்சியின் நிர்வாகிகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரையின்போது, கட்சியின் சத்தீஷ்கார் ஊடக பிரிவு தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா எனக்கு மது கொடுத்து அருந்தும்படி கூறினார். அத்துடன், அவர் மற்றும் 5-6 நிர்வாகிகள் போதையில் என் அறையின் கதவை தட்டினர். அவர்களின் அத்துமீறல் பற்றி சச்சின் பைலட் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் இந்து எதிர்ப்பு சித்தாந்தத்தை நான் பின்பற்றாததால் கட்சி தலைமை என்னை புறக்கணித்தது.

கடந்த 30-ம் தேதி மாலை மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் சுஷில் ஆனந்த் சுக்லாவிடம் பேசச் சென்றபோது அவர் என்னை திட்டினார். என்னை அறையில் வைத்து பூட்டியதுடன், அவரும் மற்ற இரண்டு மாநில செய்தித் தொடர்பாளர்களும் என்னிடம் அவமரியாதையாக நடந்துகொண்டனர். நான் கத்தி கூச்சலிட்டேன். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. மேலிடத்தில் புகார் கொடுத்தபோதும், யாரும் செவிசாய்க்கவில்லை.

காங்கிரஸ் கட்சி ராமருக்கு எதிரானது, சனாதனத்திற்கு எதிரானது, இந்துக்களுக்கு எதிரானது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நான் நம்பவே இல்லை. மகாத்மா காந்தி ஒவ்வொரு கூட்டத்திலும் 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்று கூறி தனது உரையை தொடங்குவார்.

நான் என் பாட்டியுடன் ராமர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து திரும்பியதும், என் வீட்டு வாசலில் 'ஜெய் ஸ்ரீராம்' கொடியை ஏற்றினேன். இதனால் காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கத் தொடங்கியது. அதன்பிறகு யதார்த்தத்தை வெளிப்படுத்தினேன். புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடும் போதெல்லாம், தேர்தல் பணிகள் நடக்கும் சமயத்தில் ஏன் அயோத்திக்கு சென்றீர்கள்? என்று என்னைத் திட்டினார்கள்.

22 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளேன். மாணவர் அணி முதல் ஊடகப் பிரிவு வரை நேர்மையுடன் பணியாற்றியுள்ளேன். இருந்தபோதிலும், அயோத்தி சென்று ராமரை ஆதரித்ததால் இவ்வளவு கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்