< Back
தேசிய செய்திகள்
சிவமொக்காவில் ரூ.20 லட்சத்தை திருடிய அரசு அதிகாரியின் கார் டிரைவர் கைது
தேசிய செய்திகள்

சிவமொக்காவில் ரூ.20 லட்சத்தை திருடிய அரசு அதிகாரியின் கார் டிரைவர் கைது

தினத்தந்தி
|
8 Aug 2023 12:15 AM IST

சிவமொக்காவில் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சத்தை திருடிச்சென்ற அவரது கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

சிவமொக்காவில் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சத்தை திருடிச்சென்ற அவரது கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கோவாவில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கினார்.

மாநகராட்சி அதிகாரி

சிவமொக்கா மாநகராட்சி குடிநீர் திட்ட அதிகாரியாக ஹேமந்த் குமார் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறார். இந்தநிலையில் ஹேமந்த் குமாரின் கார் டிரைவராக சிகாரிப்புரா தாலுகா சிராளகொப்பா நேரு நகரை சேர்ந்்த நிதிஷ்(வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம்(ஜூலை) 29-ந்தேதி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஹேமந்த் குமார் ஜோதி நகருக்கு சென்றார்.

காரை நிதிஷ் ஓட்டினார். அப்போது காரில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணப்பையில் ரூ.20 லட்சம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஊழியர்கள் யாரும் வராததால் ஹேமந்த் குமார் அங்கிருந்து சென்றார்.

தனிப்படை

இந்தநிலையில் பணப்பையை காரிலேயே அவர் வைத்துவிட்டார். இதையடுத்து மறுநாள் காரில் இருந்த பணப்பையை எடுக்க ஹேமந்த் குமார் சென்றார். அப்போது பணப்பையை காணவில்லை. இதுகுறித்து அவர் நிதிஷிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் எண் சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஹேமந்த் குமார் இதுகுறித்து துங்கா நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிசை தேடி வந்தனர். மேலும் அவரை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் நிதிஷ் கோவாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவாவிற்கு சென்றனர். அங்கு சூதாட்ட விடுதியில் சூதாடிக்கொண்டு இருந்த நிதிசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை துங்கா நகருக்கு அழைத்து வந்தனர்.

சிறையில் அடைப்பு

விசாரணையில், அவர் மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய ரூ.20 லட்சம் சம்பள பணத்தை ஹேமந்த்குமாரிடம் இருந்து திருடி சென்றதும், அந்த பணத்தை வைத்து கோவாவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அந்த சூதாட்டத்தில் ரூ.12 லட்சத்து 39 ஆயிரத்தை நிதிஷ் இழந்துள்ளார். அவரிடம் இருந்த ரூ. 7 லட்சத்து 61 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் மீட்டனர். பின்னர் நிதிசை போலீசார் சிவமொக்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்