ஒடிசா ரெயில் விபத்து: உரிமை கோரப்படாத 28 உடல்கள் தகனம் - இறுதி சடங்குகளை செய்த பெண் தன்னார்வலர்கள்
|ஒடிசா ரெயில் விபத்தில் இறந்து உரிமை கோரப்படாத 28 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. அந்த உடல்களுக்கு பெண் தன்னார்வலர்கள் இறுதி சடங்குகளை செய்தனர்.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ந் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.
அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரெயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம் புரண்டன. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 297 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே விபத்தில் பலியானவர்களில் 162 பேரின் உடல்கள் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 134 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதே சமயம் விபத்து நடந்து 4 மாதங்கள் ஆகியும் 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டிருந்தன. எனவே உரிமை கோரப்படாத அந்த 28 உடல்களையும் தகனம் செய்ய புவனேஸ்வர் மாநகராட்சி முடிவு செய்தது.
28 உடல்கள் தகனம்
அதன்படி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த 28 உடல்களை புவனேஸ்வர் மாநகராட்சியிடம் எய்ம்ஸ் நிர்வாகம் நேற்று முன்தினம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து பெண் தன்னார்வலர்கள் மூலம் அந்த உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு, அவற்றை தகனம் செய்யும் பணிகள் உடனடியாக தொடங்கின.
இந்த நிலையில் 28 உடல்களும் தகனம் செய்யப்பட்டதாக புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "ரெயில் விபத்தில் இறந்து உரிமை கோரப்படாதவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கியது. அனைத்து பணிகளும் புதன்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது. பெண் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து உடல்களுக்கு இறுதி சடங்கு செய்தனர்" என்றார்.
பெண் தன்னார்வலர்கள்
முதல் 3 உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் தன்னார்வலர்களான மதுஸ்மிதா பிரஸ்டி, ஸ்மிதா மோகன்தி, ஸ்வகதிகா ராவ் ஆகியோர் கூறுகையில், "அடையாளம் தெரியாத உடல்களுக்கு இந்த புனிதமான காரியத்தை செய்ய நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே முன்வந்தோம். ஒரு வேலை முந்தைய பிறப்புகளில் அவர்கள் எங்கள் சொந்தக்காரர்களாக இருந்திருக்கலாம். இறந்தவர்கள் ஆணா பெண்ணா என்று அடையாளம் கூட காணமுடியாத அளவுக்கு உடல்கள் இருந்தன. அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கு அனைத்து மரியாதைகளுடனும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன" என கூறினர்.
அனைத்து உடல்களும் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் படி தகனம் செய்யப்பட்டதாகவும், விசாரணைக்காகவும், பின்னாளில் சட்டச்சிக்கல்கள் ஏதும் வந்தால் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உடல்களின் மரபணுக்கள் பாதுக்கப்படுகின்றன என்றும் புவனேஸ்வர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.