ஒடிசா ரெயில் விபத்து; ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரும் அவலம்
|ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்தில் ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரும் அவலம் காணப்படுகிறது.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரெயில் விபத்தில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இந்த கொடூர விபத்தில் 275 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கேட்டு வரும் குடும்பத்தினருக்கு உதவியாக புவனேஸ்வர் மாநகராட்சி மற்றும் மேற்கு வங்காள அரசு இணைந்து இந்த உதவி மையங்களை ஏற்படுத்தி உள்ளன.
இதுபற்றி புவனேஸ்வர் நகர துணை காவல் ஆணையாளர் பிரதீக் சிங் கூறும்போது, ஒரு உடலுக்கு பல குடும்பத்தினர் உரிமை கோரும் நிகழ்வும் காணப்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் நாங்கள் மரபணு பரிசோதனைக்கு செல்கிறோம்.
அனைத்து உடல்களில் இருந்தும் மரபணு மாதிரிகளை நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம். வெவ்வேறு மருத்துவமனைகளில் 193 உடல்கள் வைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
இதேபோன்று, மேற்கு வங்காள அரசின் ஹவுரா கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ஜிதின் யாதவ் கூறும்போது, எங்களுடைய மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம்.
இதில் முக்கிய பிரச்சனை என்னவென்றால், உடல்களை அடையாளம் காணுவதில் நாங்கள் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். ஒரு உடலுக்கு பலரும் வந்து உரிமை கோருகின்றனர். அதுபோன்ற நேரங்களில் மரபணு பரிசோதனை நடத்தப்படும் என கூறியுள்ளார்.