ஒடிசா ரெயில் விபத்து; சிகிச்சை பெற்றவர்கள் வசதிக்காக சென்னை உள்பட 5 நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள்: மத்திய மந்திரி தகவல்
|ரெயில் விபத்துக்கு காரணமான நபர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
பாலசோர்,
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்றவர்கள் ஊர் திரும்ப வசதியாக சென்னை, பெங்களூரு உள்பட 5 நகரங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு வருகின்றன. காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதிக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடியும் நேரில் சென்று பார்வையிட்டார்.
ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. வருகிற புதன்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து, ரெயில்களை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.
இந்த நிலையில், விபத்து பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிற மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, சோரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை நேரில் சந்தித்தோம்.
நோயாளிகள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வசதியாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, ராஞ்சி, கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதனால் அவர்கள் சிரமமின்றி தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியும் என கூறியுள்ளார். இதேபோன்று, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த ரெயில் விபத்துக்கு காரணமான நபர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்று கூறியுள்ளார்.