ஒடிசா ரெயில் விபத்து - பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
|ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி தடம்புரண்டதால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான ரெயில் விபத்தாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பாலசோர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் " இந்திய வரலாற்றில் மிக மோசமான ஒன்றான ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்து தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துக்கத்தின் இந்த நேரத்தில் நாடு ஒன்றுபட்டுள்ளது, இருப்பினும் பல விலைமதிப்பற்ற உயிர்கள் இழப்பு ஒவ்வொரு இந்தியனின் மனசாட்சியையும் உலுக்கியது. இந்த உயிர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது மற்றும் பண இழப்பீடு அல்லது இரங்கல் வார்த்தைகள் இந்த பாரதூரமான சோகத்தை ஈடுசெய்ய முடியாது.
போக்குவரத்து துறையில் அனைத்து புரட்சிகரமான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்திய ரெயில்வே இன்னும் ஒவ்வொரு சாதாரண இந்தியனுக்கும் ஒரு உயிர்நாடியாக உள்ளது. இது மிகவும் நம்பகமான போக்குவரத்து முறை மட்டுமல்ல, மிகவும் சிக்கனமான போக்குவரத்து முறையும் கூட. ஒவ்வொரு நாளும் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகைக்கு சமமான பயணிகளை ரெயில்வே கொண்டு செல்கிறது.
மேலும், பிரதமர் மோடிக்கு 11 கேள்விகளை மல்லிகார்ஜூன கார்கே முன்வைத்துள்ளார். கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே முன்வைத்த கேள்விகள்:-
*9 ஆண்டுகளாக 3 லட்சம் காலிப் பணி இடங்களை நிரப்பாதது ஏன்? 18 லட்சம் ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை 12 லட்சமாக குறைத்தது ஏன்?
* 3.8 லட்சம் ஊழியர்களை இன்னமும் ஒப்ப்ந்த பணியாளர்களாகவே வைத்திருப்பது ஏன்?
* பணிநேரத்துக்கு அதிகமாக பணிபுரியவேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்துவது ஏன்?
* ரயில் ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? தென்மேற்கு மண்டல அதிகாரி சிக்னல் கட்டமைப்பு கோளாறு தொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் அலட்சியம் ஏன்?
* ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை பலப்படுத்தாமல் இருப்பது ஏன்? ரயில்வே பாதுகாப்பு ஆணையத்துக்கு தன்னாட்சி வழங்காமல் இருப்பது ஏன்? ரயில்வே ஆணையத்தின் பாதுகாப்பு பரிந்துரைகளை அலட்சியப்படுத்துவது ஏன்?
* இந்திய தலைமை கணக்கு அதிகாரி சுட்டிக் காட்டிய பின்னும் தண்டவாளம் சீரமைப்பு இல்லை ஏன்? காங். அரசு அறிவித்த ரயில் மோதல் தடுப்பு திட்டத்தை ஏன் மோடி அரசு செயல்படுத்தவில்லை?
* கான்பூர் ரயில் விபத்து சதி என கூறப்பட்டு என்.ஐ.ஏ. விசாரித்தும் கைவிடப்பட்டது கான்பூர் ரயில் விபத்து போல ஒடிஷா ரயில் விபத்து விசாரணையை சிபிஐ நடத்துமா?
* ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்களை தண்டிக்காமல் திசை திருப்புவது ஏன்?
* ஒடிசா ரயில் விபத்துக்கு மூல காரணம் கண்டுபிடித்துவிட்டோம் என கூறிய பின் சிபிஐ விசாரணை ஏன்? சிபிஐயில் ரயில்வே சார்ந்த வல்லுநர்கள் இல்லாத போது எப்படி விசாரணை நடை பெறும்?
* தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை 79% குறைத்தது ஏன்? தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான ரூ20,000 கோடி நிதி என்னதான் ஆயிற்று? கவாச் திட்டத்தை 4% வழித்தடங்களில் மட்டுமே அமல்படுத்தி இருப்பது ஏன்?
* ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை என்பது திசை திருப்புவதற்காகவா?
* ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்தில்தான் தனி ரயில்வே பட்ஜெட் முறையையே கைவிட்டதா மத்திய பாஜக அரசு?. எனவே ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி தெரிவித்துள்ளார்.