ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கையில் காரசார விவாதம்; 500-மம்தா பானர்ஜி, 238-மத்திய மந்திரி
|ஒடிசா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 500-ஐ தொடும் என மம்தா கூறியதற்கு, இந்த விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் 2 பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரெயில் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்ட சம்பவ பகுதிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று நேரில் சென்றார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது, மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி பேசும்போது, ஒடிசா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 500-ஐ தொடும் என நான் கேள்விப்பட்டேன என கூறியுள்ளார். இதற்கு, அருகே நின்றிருந்த மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா அரசின் தகவலின்படி 238 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறினார்.
இதனால், சிறிது நேரம் இருவருக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. இந்திய ரெயில்வே இன்று மதியம் 2 மணி நிலவர அடிப்படையில், வெளியிட்டு உள்ள செய்தியின்படி, ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆகும். 747 பேர் காயம் அடைந்தும், 56 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர் என தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் பற்றி மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்றிரவு செய்தியாளர்களிடம் கூறும்போது, நமக்கு முழுமையான வெளிப்படை தன்மை தேவை.
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. இது, மீட்பு பணி மிக விரைவாக நடக்கிறது என உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கான நேரம் என்று அவர் கூறியுள்ளார்.