ஒடிசா ரெயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு காசோலை, வேலை: மம்தா பானர்ஜி அறிவிப்பு
|ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுக்கான காசோலை, வேலைக்கான கடிதம் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.
காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதிக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடியும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலசோரில் விபத்து நடந்த பகுதியில் இன்று முதல் ரெயில் பயணம் தொடங்கியது. விபத்துக்கு பின்னர், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உடன் இருந்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பலி எண்ணிக்கை 500-ஐ தொடும் என கேள்விப்பட்டேன் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். அதனை மந்திரி வைஷ்ணவ் மறுத்ததுடன், அரசியல் வேண்டாம் என பின்னர் கூறினார்.
இந்த நிலையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறும்போது, ஒடிசாவின் கட்டாக் மற்றும் புவனேஸ்வர் நகரங்களுக்கு நான் மீண்டும் செல்வேன்.
ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் இழப்பீட்டு தொகைக்கான காசோலை மற்றும் வேலைக்கான கடிதம் ஆகியவற்றை நாளை மறுநாள் (புதன்கிழமை) நாங்கள் ஒப்படைப்போம் என அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ரெயில்வே வாரியம் கோரிக்கை விடுத்து உள்ளது. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். உண்மையை தடுப்பதற்கான நேரம் இதுவல்ல என அவர் கூறியுள்ளார்.