< Back
தேசிய செய்திகள்
ஒடிசா ரெயில் விபத்து; பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க அதானி குழுமம் முடிவு
தேசிய செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து; பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க அதானி குழுமம் முடிவு

தினத்தந்தி
|
4 Jun 2023 6:39 PM IST

ஒடிசா ரெயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க அதானி குழுமம் முடிவு செய்து உள்ளது.

ஆமதாபாத்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு வருகின்றன. காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதிக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடியும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிந்து, மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. வருகிற புதன்கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்து, ரெயில்களை மீண்டும் இயக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஒடிசா ரெயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கான பொறுப்பை ஏற்க எங்களுடைய குழுமம் முடிவு செய்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த விபத்து செய்தி தன்னை மனதளவில் ஆழ பாதித்து உள்ளது என தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையை வழங்க வேண்டியது மற்றும் அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் சிறக்க செய்ய வேண்டியதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பு ஆகும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்