ஒடிசா ரெயில் விபத்து - 95 ரெயில் சேவை இன்று ரத்து
|உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணியில் 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பாலசோர்,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்து எதிரொலியாக தென்கிழக்கு ரெயில்வே பிராந்தியத்தில் பயணிக்கும் 95 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 96 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 46 ரெயில்கள் வேறு பகுதி வழியாக திருப்பி அனுப்பபடுகிறது. தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.