< Back
தேசிய செய்திகள்
ஒடிசா: சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரியின் மகள் தீபாளி தாஸ் ஜார்சுகுடா இடைத்தேர்தலில் வெற்றி
தேசிய செய்திகள்

ஒடிசா: சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரியின் மகள் தீபாளி தாஸ் ஜார்சுகுடா இடைத்தேர்தலில் வெற்றி

தினத்தந்தி
|
13 May 2023 9:35 AM GMT

இடைத்தேதலில் கிடைத்த வெற்றி தனது தந்தை நபா கிஷோ தாஸின் வெற்றி என்று தீபாளி தாஸ் தெரிவித்தார்.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாகவும் இருந்த நபா கிஷோர் தாஸ். இவரை கடந்த ஜனவரி மாதம் ஜார்சுகுடா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் சரமாரியாக சுட்டார்.

இதில் படுகாயமடைந்த நபா கிஷோர் தாஸ் புவனேஸ்வர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய போலீஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு மனநல பிரச்சினை இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நபா கிஷோர் தாஸின் மகள் தீபாளி தாஸ், ஜார்சுகுடா இடைத்தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தீபாளி தாஸ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தங்கதார் திரிபாதி சுமார் 58 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

இதன் மூலம் சுமார் 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிஜூ ஜனதாதளம் வேட்பாளர் தீபாளி தாஸ் வெற்றியை உறுதி செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபாளி தாஸ், "இந்த வெற்றியானது ஜார்சுகுடா மக்களுக்கும், எனது தந்தையை நேசிப்பவர்களுக்கும், முதல்-மந்திரிக்கும், பிஜூ ஜனதாதளம் மற்றும் எனது தந்தையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். இது எனது தந்தை நபா கிஷோ தாஸின் வெற்றி" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்