< Back
தேசிய செய்திகள்
ஒடிசா: போலீஸ் காவலில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்... எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்
தேசிய செய்திகள்

ஒடிசா: போலீஸ் காவலில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்... எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
21 Sept 2024 6:38 PM IST

ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு போலீஸ் காவலில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய விவகாரத்தில், காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ராணுவ அதிகாரி, அவருடைய வருங்கால மனைவியுடன் இரவில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது புகாரளிக்க காவல் நிலையத்திற்கு சென்றபோது, ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியிடம் காவல் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 14-ந்தேதி, அந்த அதிகாரி அவருடைய வருங்கால மனைவியுடன் இரவில் காரில் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, பரத்பூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அப்போது, புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணுக்கும், காவல் துறை உயரதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பெண்ணை சிறையில் அடைத்துள்ளனர். அவர் காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டார் என்றும் பணியில் இருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், அந்த பெண்ணை போலீசார் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர் என அவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதன்பேரில் ஒடிசா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது.

அந்த பெண் கூறும்போது, என்ன நடந்தது என தெரியவில்லை. ராணுவ அதிகாரியான அவரை லாக்-அப்பில் வைத்தனர். இதற்கு எதிராக குரலெழுப்பினேன். சட்டவிரோதம் என்றேன். பணியில் இருந்த 2 பெண் அதிகாரிகளும் உடல்ரீதியாக துன்புறுத்தினர் என்றார்.

அவர்களுக்கு எதிராக போராட முயன்றபோது, இவருடைய கைகளையும், கால்களையும் கட்டி அறையொன்றில் போட்டுள்ளனர். இந்த சூழலில், பாலியல் துன்புறுத்தலில் போலீசார் ஈடுபட்டனர் என அந்த பெண் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிஜு ஜனதா தள கட்சியை சேர்ந்த மகளிரணியினர் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரிலுள்ள கவர்னர் மாளிகை முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று காங்கிரஸ் தொண்டர்களும், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மஜ்ஜியின் வீட்டை முற்றுகையிட்டு போராட முயன்றனர். உள்துறை பதவியையும் சேர்த்து வகிக்கும் அவரை பதவி விலக கோரியும், பொதுமக்களை அதிலும், பெண்களை பாதுகாக்க பா.ஜ.க. அரசு தவறி விட்டது என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்