மதுபோதையில் தகராறு செய்த மனைவி - ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்
|மதுபோதையில் தகராறு செய்த மனைவியை, கணவன் மரப்பலகையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர், தனது மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் மைத்ரி விஹார் காவல் நிலையப் பகுதியில் உள்ள தாரிணி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மதுவுக்கு அடிமையான அவரது மனைவி, கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் குடித்துவிட்டு அவருடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், மரப்பலகையால் மனைவியை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் மனைவியின் உடலை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு எதுவுமே நடக்காததுபோல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பிய அவரது மூத்த மகன் (19 வயது), தாயின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.