ஒடிசா: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூரி கடற்கரையில் பிரமாண்ட சாண்டா கிளாஸ் மணற்சிற்பம்!
|சுமார் 2 டன் வெங்காயத்தைக் கொண்டு உலகின் மிகப்பெரிய சாண்டா கிளாஸ் மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, இனிப்புகளை பகிர்ந்து, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தைனைகளில் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் பிரமாண்ட சாண்டா கிளாஸ் மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இதனை உருவாக்கியுள்ளார். வெங்காயங்களைக் கொண்டு இந்த மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ள அவர், இதற்காக சுமார் 2 டன் வெங்காயங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பூரி கடற்கரையில் வித்தியாசமான முறையில் மணற்சிற்பங்களை உருவாக்க முயற்சி செய்வோம். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 2 டன் வெங்காயங்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய சாண்டா கிளாஸ் மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளோம்.
இது 100 அடி நீளமும், 20 அடி உயரமும், 40 அடி அகலமும் கொண்டது ஆகும். பருவநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். எனவே, மரங்களை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வெங்காயத்தைப் பயன்படுத்தி இந்த மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.