மின்னல் பாதிப்புகளை தவிர்க்க பனை மரங்களை நட ஒடிசா அரசு திட்டம்
|ஒடிசா மாநில அரசு மின்னல் தாக்குதலை மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 923 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா மாநில அரசு மின்னல் தாக்குதலை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் 281 பேர் பலியாகி உள்ளனர். பெரும்பாலும் கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் வேலைபார்க்கும் விவசாயிகளே அதிக அளவு மின்னல் தாக்குதலில் பலியாகிறார்கள்.
இவ்வாறு ஏற்படும் மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, வனத்துறை மற்றும் வேளாண்மை துறைகள் அதிக அளவில் பனை மரங்களை வளர்க்க ஒடிசா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான முடிவு நிவாரண ஆணையர் சத்யபிரதா சாஹூ தலைமையில் நடந்த வேளாண் துறைகளுக்கிடையேயான கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
தென்னை மரங்களை விட உயரமான பனை மரங்கள் மின்னலுக்கு எதிராக கவசமாக செயல்படும் என புவனேஸ்வரில் உள்ள பிராந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி உமா சங்கர் தாஸ் தெரிவித்துள்ளார்.