ஒடிசாவில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படும் முறை ரத்து
|ஒடிசாவில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படும் முறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் முறைப்படுத்தப்படுவார்கள் என முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு முறையை நிரந்தரமாக ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றும் பல மாநிலங்களில் வழக்கமான முறையில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுவது இல்லை. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு முறையை தொடர்கின்றனர். ஆனால் ஒடிசாவில், ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும். இதன் மூலம் 57 ஆயிரத்திற்கும் அதிமான ஊழியர்கள் பயனடைவார்கள். இதன்மூலம் அரசாங்கத்திற்கு சுமார் ஆயிரத்து 300 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இந்த முடிவின் மூலம் ஒப்பந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தீபாவளி முன்கூட்டியே வந்துள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.