ஒடிசா விபத்து: இன்று முதல் ரெயில் சேவை துவங்கியது..!!
|நேற்று வரை 90 ரெயில்கள் ரத்தானநிலையில் பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்கியது.
பாலசோர்,
மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது.
இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதி தடம்புரண்டதால் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்தது. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான ரெயில் விபத்தாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அதேநேரம் காயம் அடைந்தவர்கள் பாலசோர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். எனவே காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கு உதவும் வகையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் தலைநகரில் உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகளில் இருந்து முன்னணி நிபுணர்கள் நேற்று புவனேஸ்வர் விரைந்தனர். இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் நவீன மருத்துவ தளவாடங்கள், அவசர சிகிச்சை பிரிவு உபகரணங்களும் எடுத்து செல்லப்பட்டன.
ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு பின் சொந்த ஊர் செல்வதற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து ரெயில் பாதைகளை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்வதற்கான பணிகள் நடந்து வந்தன.
விபத்து நடந்து 51 மணி நேரத்திற்கு பின் விபத்து நடந்த தண்டவாளம் வழியாக மீண்டும் சரக்கு ரெயில் சேவை நேற்று இரவு தொடங்கப்பட்டது. தண்டவாளங்கள் சரிசெய்யப்பட்ட நிலையில் விபத்து நடந்த பகுதி வழியாக சோதனை முறையில் சரக்கு ரெயில் இயக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் நேற்று முன் தினம் முதல் தங்கியுள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்கி உள்ளது. நேற்று வரை 90 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக விபத்து நடந்த பாலசோர் பகுதி வழியாக பயணிகள் ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது. .
முன்னதாக சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து 5-ந் தேதி (இன்று) இரவு 7.20 மணிக்கு புறப்படும் ஹவுரா அதிவிரைவு மெயில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது என்றும் இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரெயில் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் 123 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் ரெயில்வே துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.