ஆபாச வீடியோ வழக்கு உடுப்பி கல்லூரியில் போலீசார் தீவிர விசாரணை
|உடுப்பி கல்லூரியில் நேற்று விடுமுறை நாளிலும் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், சில ஆதாரங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
உடுப்பி:-
மாணவி ஆபாச வீடியோ
உடுப்பி மாவட்டம் அம்பலபாடி பகுதியில் உள்ளது தனியார் பாராமெடிக்கல் கல்லூரி. இந்த கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் கல்லூரி கழிவறையில் செல்போன் கேமரா வைத்து, சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மல்பே போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றார். ஆனால் இந்த விசாரணையில் திருப்தியில்லை. விசாரணை அதிகாரிகளை மாற்றவேண்டும். வழக்கை சரியான பாதையில் எடுத்து செல்லவேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா, விசாரணை அதிகாரியான மல்பே இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத்தை விடுவித்தார்.
விசாரணை தீவிரம்
அதற்கு பதிலாக குந்தாபுரா துணை போலீஸ் சூப்பிரண்டு பெல்லியப்பா நியமனம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அவர் இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத்திடம் இருந்து பெற்று கொண்டார். மேலும் சம்பவ இடத்திற்கு சென்றும் பெல்லியப்பா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியதுடன், கல்லூரி மாணவிகளிடமும் விசாரித்தனர்.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை நாளிலும் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது மாணவிகள் கழிவறை மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த மாணவர்கள் குறித்து போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் கல்லூரி நிர்வாகிகளையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.
வீடியோ ஆதாரம் கிடைக்க வாய்ப்பு
இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மாணவிகள் மற்றும் அவர்களின் நண்பர்களின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த வழக்கில் தொடர்புடையது மட்டுமில்லாமல் மேலும் சில வீடியோக்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.