ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ்
|ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார்.
இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ- மெயில் வாயிலாக கடிதம் அனுப்பியிருந்தது. மேலும் அதில், குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக சிபிஐ, கர்நாடக சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளது. இன்டர்போல் அமைப்பில் உள்ள 196 நாடுகளுக்கும் பிரஜ்வல் ரேவண்ணா குறித்த தகவல்கள் இருந்தால் தெரிவிக்குமாறு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.