< Back
தேசிய செய்திகள்
ஆபாச வீடியோ விவகாரம்; நிரபராதி என நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை:  பா.ஜ.க. எம்.பி.
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோ விவகாரம்; நிரபராதி என நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை: பா.ஜ.க. எம்.பி.

தினத்தந்தி
|
4 March 2024 12:02 PM GMT

டீப்பேக் ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் ஒரு போலியான வீடியோ உருவாக்கப்பட்டு, வைரலாக்கப்பட்டு வருகிறது என பா.ஜ.க. எம்.பி. உபேந்திரா கூறியுள்ளார்.

பாராபங்கி,

2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 2-ந்தேதி வெளியிட்டது. அக்கட்சியின் பொது செயலாளர் வினோத் தாவடே இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில், 34 மத்திய மந்திரிகள் மற்றும் மத்திய இணை மந்திரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் முதல்-மந்திரிகள் இரண்டு பேரும் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலின்படி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களான மத்திய மந்திரி பதவிகளை வகித்து வரும் அமித்ஷா காந்திநகரில் இருந்தும், ராஜ்நாத் சிங் லக்னோவில் இருந்தும், மன்சுக் மாண்டவியா போர்பந்தர் தொகுதியில் இருந்தும், கிரண் ரிஜிஜூ அருணாசலம் மேற்கு தொகுதியில் இருந்தும், ஜோதிராதித்ய சிந்தியா குணா தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

இந்த பட்டியலின்படி, உத்தர பிரதேசத்தின் பாராபங்கி தொகுதியில் இருந்து பா.ஜ.க. எம்.பி. உபேந்திரா சிங் ராவத் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டது.

இந்நிலையில், சமூக ஊடகத்தில் ராவத்தின் ஆபாச வீடியோ ஒன்று வைரலானது. இந்த விசயத்தில் நிரபராதி என நிரூபிக்கும் வரை, எம்.பி. தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று ராவத் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், டீப்பேக் ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் ஒரு போலியான வீடியோ உருவாக்கப்பட்டு, வைரலாக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி நான் எப்.ஐ.ஆர். பதிவு செய்து இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார். இந்த விசயம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சியின் தலைவரிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்