பதஞ்சலி யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஒளிபரப்பான ஆபாச படம்; போலீசார் விசாரணை
|பதஞ்சலி யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஆபாச படம் அனுப்பிய நபர் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அரித்துவார்,
உத்தரகாண்டின் அரித்துவார் மாவட்டத்தில் பகத்ராபாத் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பதஞ்சலி சுகாதார ஆய்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த மையம் ஆன்லைன் வழியே, தேவைப்படுவோருக்கு யோகா பயிற்சிகள், வகுப்புகளை எடுத்து வருகிறது. இதற்காக ஜூம் செயலி வழியேயான ஆன்லைன் கூட்டம் ஒன்று நடந்து வந்துள்ளது.
இந்த கூட்டத்தில் பதஞ்சலி யோகபீட அமைப்பில் உள்ளவர்களும், இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களும் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்து கொண்ட மராட்டியத்தின் புனே நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென ஆபாச படம் ஒன்றை, கூட்டத்தின் நடுவே ஒளிபரப்பி விட்டுள்ளார்.
இதனால், யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுபற்றி பகத்ராபாத் காவல் நிலையத்தில், பதஞ்சலி அமைப்பை சேர்ந்த கமல் பதோரியா மற்றும் சிவம் வாலியா ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
போலீஸ் சூப்பிரெண்டு அஜய் சிங் கூறும்போது, ஐ.டி. சட்டத்தின் கீழ் ஆகாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் புனே நகரின் எரவாடா பகுதியில் பி.காம் கல்லூரி வளாகம் அருகே வசித்து வருகிறார் என கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.