தலையை துண்டித்து நர்சிங் மாணவி படுகொலை - ரத்தம் சொட்ட, சொட்ட தலையுடன் போலீஸ் நிலையம் வந்த வாலிபர்
|வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் மிரட்டல் விடுத்த நர்சிங் மாணவியை தலை துண்டித்து கொலை செய்துவிட்டு தலையுடன் ரத்தம் சொட்ட, சொட்ட வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.
பெங்களூரு:
மிரட்டல்
விஜயநகர் மாவட்டம் கூடலகி தாலுகா கானஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் போஜராஜா (வயது 26). இவர் கன்னஅபோரனய்ய ஹட்டி பகுதியை சேர்ந்த நிர்மலா (23) என்ற பெண்ணை காதலித்து வந்தார். நிர்மலாவும் போஜராஜாவை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் போஜராஜா, நிர்மலாவுடன் பழகுவதை கைவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த நிர்மலா, போஜராஜாவுடன் தகராறு செய்து வந்ததுடன், காதல் விவகாரத்தை அவரது மனைவியிடம் கூறிவிடுவதாக மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.
தலை துண்டித்து கொலை
இதனால் ஆத்திரமடைந்த போஜராஜா, நிர்மலாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு காத்திருந்து வந்தார். இந்த நிலையில், ஒசப்பேட்டேயில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்த நிர்மலா கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதை எப்படியோ தெரிந்துகொண்ட போஜராஜா இன்று மதியம் நிர்மலாவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் அரிவாளை மறைத்து எடுத்து சென்றுள்ளார். வீட்டுக்குள் சென்றதும் அங்கிருந்த நிர்மலாவை அவர் சரமாரியாக தாக்கியதுடன், அரிவாளால் அவரது கழுத்தை வெட்டி தலையை துண்டாக்கினார். இதில் நிர்மலா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசில் சரண்
பின்னர் ரத்தம் சொட்ட, சொட்ட துண்டித்த தலையை கையில் பிடித்தபடி நடந்தே அவர் கானஒசஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அவரை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து சம்பவம் பற்றி விசாரித்தனர். அப்போது, தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் காதலியான நிர்மலா காதல் விவகாரம் குறித்து மனைவியிடம் கூறிவிடுவதாக மிரட்டியதால் அவரை கொலை செய்து தலையுடன் போலீஸ் நிலையம் வந்திருப்பதாக கூறினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து நிர்மலாவின் வீட்டுக்கு சென்று அவரது உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான போஜராஜாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.