< Back
தேசிய செய்திகள்
2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு முந்தைய பழைய வாகனங்களின் பதிவெண் பலகையை மாற்ற உத்தரவு
தேசிய செய்திகள்

2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு முந்தைய பழைய வாகனங்களின் பதிவெண் பலகையை மாற்ற உத்தரவு

தினத்தந்தி
|
18 Sept 2023 2:56 AM IST

2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு முந்தைய பழைய வாகனங்களின் பதிவெண் பலகையை மாற்ற அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பெங்களூரு:

குற்றங்களை தடுக்கவும், வாகனங்களை எளிதாக அடையாளம் காணும் வகையிலும், போலி வாகன பதிவெண்களை களையெடுக்கவும் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2001-ம் ஆண்டே பழைய வாகனங்களின் பதிவெண் பலகைகளை மாற்ற உத்தரவிட்டது.

உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை

அதாவது உயர் பாதுகாப்பு பதிவெண் பலகையாக (எச்.எஸ்.ஆர்.பி.) மாற்ற நடவடிக்கை எடுத்தது. ஆனால் அப்போது பல சிக்கல்கள் எழுந்ததால், அது அமல்படுத்தப்படவில்லை.

அதன்பிறகு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களின் பதிவெண் பலகையும் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகையை பொருத்துவது கட்டாயமாக்கி உத்தரவிட்டது. அதன்படி தற்போது விற்பனை ஆகும் புதிய கார், இருசக்கர வாகனங்கள், பஸ்கள், கனரக வாகனங்களில் இந்த புதிய பதிவெண் பலகை பொருத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் 2 கோடி வாகனங்கள்

மேலும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு முந்தைய பழைய வாகனங்களின் பதிவெண் பலகையை மாற்ற அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் சுமார் 2 கோடி பழைய வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களில் புதிய வாகன பதிவெண் பலகையை பொருத்த வேண்டியதுள்ளது. இதில் 1.40 லட்சம் இருசக்கர வாகனங்களும், 40 லட்சம் இலகுரக வாகனங்களும், சுமார் 20 லட்சம் போக்குவரத்து வாகனங்களும் அடங்கும். இந்த 2 கோடி வாகனங்களிலும் புதிய வாகன பதிவெண் பலகையை பொருத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த பழைய வாகன பலகையை மாற்ற வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

கட்டணம் நிர்ணயம்

வாகன உரிமையாளர்கள் பதிவெண் பலகையை மாற்ற ஷோரூம் அல்லது டீலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கர்நாடகத்தில் பழைய வாகனங்கள் வைத்துள்ளவர்கள் புதிய வாகன பதிவெண் பலகையை பொருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதுபற்றி மாநில போக்குவரத்து துறை மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்றும் பழைய வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதே வேளையில் இதனால் தங்களுக்கு பெரிதும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கமான வாகன பதிவெண் பலகைகளை தயாரித்து வந்த உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிப்பு

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.சதீஷ் கூறியதாவது:-

பழைய வாகன பதிவெண் பலகைக்கு பதிலாக புதிய உயர்தர வாகன பதிவெண் பலகை பொருத்த அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நமது மாநிலத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இதை தவிர வேறு தொழில் தெரியாது. ஆனால் அரசின் அறிவிப்பு உயர்தர வாகன பதிவெண் பலகை தயாரிப்போருக்கு வசதி செய்துகொடுப்பதற்காக இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வருவதாக கருதுகிறோம். ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள் அல்லது வாகன உற்பத்தியாளர்களால் அங்கீகரிப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே உயர்தர பதிவெண் பலகையை பொருத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது மத்திய மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளுக்கு எதிரானது. எச்.எஸ்.ஆர்.பி. பதிவெண் பலகை உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய எங்களை அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நாங்களும் புதிய வாகன பதிவெண் பலகையை தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம். சந்தையில் அதிகமான உயர்தர பதிவெண் பலகை தயாரிக்கும் உற்பத்தியாளர்களை அனுமதிப்பது போட்டி விலை நிர்ணயம் மற்றும் நுகர்வோருக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க...

பெங்களூருவில் வாகன பதிவெண் பலகை விற்பனையாளரும், பதிவெண் பலகை ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வருபவருமான பைன் ஆர்ட்ஸ் கே.கார்த்தி கூறியதாவது:-

பெங்களூருவில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன பதிவெண் பலகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளனர். அதுபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வருபவர்களும், அதை நம்பி சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் அரசின் தற்போதைய உயர்தர பதிவெண் பலகை அறிவிப்பால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே கர்நாடக அரசும், போக்குவரத்து துறையும் எங்களுக்கு உதவ முன்வர வேண்டும். உயர்தர வாகன பதிவெண் பலகை தயாரிக்க எங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். ஏற்கனவே வாகன பதிவெண் பலகைக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அரசின் இந்த உத்தரவால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரியான ஜி.எஸ்.ஹெக்டே கூறியதாவது:-

பழைய வாகனங்களின் பதிவெண் பலகையை மாற்ற உத்தரவிட்டு இருப்பது பலரை பாதிப்பது உண்மை தான். இதுகுறித்து உள்ளூர் போலீசார் மற்றும் மாநில, மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான போக்குவரத்து அதிகாரிகள் அதற்கான தகவலை மக்கள் மத்தியில் தெரியப்படுத்த வேண்டும். முழு விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அரசு அறிவித்தால் அதில் ஏதாவது மக்களுக்கு பயனுள்ள திட்டமாகத் தான் இருக்கும். பழைய வாகனங்களை தான் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் அரசு பழைய வாகனங்களில் புதிய உயர்தர பாதுகாப்பு பதிவெண் பலகையை பொருத்த உத்தரவிட்டுள்ளது. இதற்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த பதிவெண் பலகையை பொருத்த கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குற்றச்சம்பவங்களை தடுக்க...

இதுகுறித்து சிக்கமகளூரு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் கூறுகையில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு முந்தைய பழைய இருசக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்களில் பழைய பதிவெண் பலகையை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்களை தடுக்கவும், வாகனங்களை அடையாளம் காணும் வகையிலும் பழைய வாகனங்களில் புதியதாக உயர்தர பாதுகாப்பு பதிவெண் பலகை மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பழைய வாகனங்கள் வைத்திருப்போர் புதிய வாகன பதிவெண் பலகையை மாற்ற வேண்டும். இதுதொடர்பாக அரசும், போக்குவரத்து போலீசாரும், போக்கு வரத்து துறையும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

நாளை விசாரணை நடைபெறுகிறது

கர்நாடகத்தில் பழைய வாகனங்களில் உயர்தர வாகன பதிவெண் பலகையை பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து, பழைய வாகனங்களில் உயர்தர பலகையை பொருத்த வேண்டும் என்று கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஷியாம் பிரசாத் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ந் தேதி நடந்த விசாரணையின் போது இந்த பொதுநல மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு (அதாவது நாளை) ஒத்திவைத்து நீதிபதி ஷியாம் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் விசாரணையின் போது, கர்நாடக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்