< Back
தேசிய செய்திகள்
நாட்டில் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடி; மத்திய மந்திரி அறிவிப்பு
தேசிய செய்திகள்

நாட்டில் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடி; மத்திய மந்திரி அறிவிப்பு

தினத்தந்தி
|
17 July 2022 12:51 PM IST

நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியை கடந்துள்ளது என மத்திய மந்திரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.





புதுடெல்லி,



உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் பல்வேறு அலைகளால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. சர்வதேச அளவில் 56 கோடிக்கும் கூடுதலானோர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவை தடுக்க மற்றும் கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி முதல் மத்திய அரசு இலவச அடிப்படையில் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளதாக மத்திய சுகாதாரதுறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய காலை நிலவரப்படி 200 கோடி இலக்கை அடைய இன்னும் 1.63 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட வேண்டி இருந்தது. இதனை கோவின் வலைதளம் இன்று காலை தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து விடுமுறை நாளான இன்றும் கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தும் பணிகள் தொடர்ந்தன. மக்கள் பலர் ஆர்வமுடன் தடுப்பூசி டோஸ் போட்டு கொண்டனர்.

இந்த சூழலில், நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது 200 கோடி என்ற மைல்கல்லை அடைந்துள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, இந்தியாவில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியை கடந்திருப்பது நமக்கு பெருமைக்குரிய விசயம். இந்த சாதனைக்காக சுகாதார நல பணியாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு பாராட்டுதல்களை நான் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இதன்படி மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்களில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோசும், 90 சதவீதம் பேர் முழு அளவிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று தகுதியுள்ள மொத்தம் 5 கோடியே 63 லட்சத்து 67 ஆயிரத்து 888 பேருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் இதுவரை போடப்பட்டு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




மேலும் செய்திகள்