இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி மைல்கல்லை எட்டியது: மத்திய சுகாதார மந்திரி
|இந்தியாவில் இதுவரை செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி மைல்கல்லை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றானது பல்வேறு அலைகளாக பரவி, பாதிப்பு ஏற்படுத்தியதில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. சர்வதேச அளவில் 65 கோடிக்கும் கூடுதலானோர் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரவலை முன்னிட்டு, தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் மத்திய அரசு இலவச அடிப்படையில் வழங்கி வருகிறது. இதற்காக நமது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோர் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி மொத்தம் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. கடந்த ஜூலை 17-ந்தேதி 200 கோடி டோஸ் செலுத்தி புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது.
இதற்கு பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதேபோன்று, தொடர்ந்து நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது இன்று 220 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. இதனை மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.