< Back
தேசிய செய்திகள்
நிர்வாண வழிபாடு, மனிதகறி உணவு, பாலியல் உறவு... அதிர வைத்த கேரள தம்பதி
தேசிய செய்திகள்

நிர்வாண வழிபாடு, மனிதகறி உணவு, பாலியல் உறவு... அதிர வைத்த கேரள தம்பதி

தினத்தந்தி
|
12 Oct 2022 1:20 PM IST

இளமை பொலிவுக்காக நரபலி கொடுத்த பெண்களின் கறியை உண்ட கேரள தம்பதி பற்றிய திடுக் தகவல் வெளியாகி உள்ளது.

திருவனந்தபரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் (வயது 50). லாட்டரி வியாபாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காலடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் பத்மா (54). இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. பத்மா மட்டும் எர்ணாகுளம் நகருக்கு வேலை தேடி வந்தார். பின்னர் பொண்ணுரணி பகுதியில் தங்கியிருந்து, லாட்டரி வியாபாரம் செய்து வந்தார். அவரது குடும்பத்தினர் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதற்கிடையே கடந்த 26-ந் தேதி அழைத்த போது, பத்மா செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அவரது மகன் செல்வன் எர்ணாகுளத்துக்கு வந்து, தனது தாயை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால், அவரை காணவில்லை. இதுகுறித்து கடவந்தரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மர்மமான முறையில் 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். பத்மாவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அதில், பத்தினம்திட்டா திருவல்லா பகுதியில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபருடன் பத்மா ஒரு காரில் சென்றது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து விசாரித்த போது பெரும்பாவூரை சேர்ந்த முகமது ஷபி என்ற ஷிகாப்பு (48) என்பது தெரியவந்தது. அந்த நபரை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு,

திருவல்லா அருகே இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவல் சிங் என்ற பகவந்த் (55). பாரம்பரிய மசாஜ் சிகிச்சை நிபுணரான இவரது மனைவி லைலா (52). இதற்கிடையே பகவந்துக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இருந்தார். அப்போது முகமது ஷபியின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் பெரும்பாவூரில் தனக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வ செழிப்பும், மேன்மையும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இதற்கு நரபலி கொடுக்க வேண்டும் என்றும் முகமது ஷபி கூறினார். இதற்காக ரூ.10 லட்சம் முன்பணமாக பெற்றுக்கொண்ட அவர், நரபலி கொடுக்க பெண்ணை தேடி வந்தார். அப்போது ரோஸ்லினை சந்தித்து சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி தம்பதி வீட்டுக்கு கடத்தி சென்றார்.

அவரை அங்கு கட்டி வைத்து, தலையில் சுத்தியலால் அடித்தும், கழுத்தை கத்தியால் அறுத்தும் நரபலி கொடுத்தனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து வீட்டுக்கு பின்புறம் குழிதோண்டி உடலை துண்டு, துண்டாக வெட்டி புதைத்தனர். அதன் பின்னரும் தம்பதி வீட்டுக்கு ஐஸ்வர்யம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தம்பதி முகமது ஷபியிடம் கேட்டபோது, மேலும் ஒரு நரபலி கொடுக்க வேண்டும் என்றார். இதனை நம்பிய தம்பதி மேலும் ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளனர். இதனை தொடர்ந்து, முகமது ஷபி பத்மாவை சந்தித்து சினிமாவில் நடிக்க வைப்பதாகவும், பல லட்சம் தருகிறேன் என்றும் கூறி தம்பதி வீட்டுக்கு கடத்தி சென்றார். பின்னர் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, உடலை, துண்டு, துண்டாக்கி புதைத்தது தெரியவந்தது.

வாழ்க்கையில் திடீர் பணக்காரர்களாக ஆக ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்த பகவந்த், லைலா மற்றும் இடைத்தரகர் முகம்மது ஷபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து திருவல்லாவில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை வெளியே எடுத்து, அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், கேரள தம்பதியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில், 3-வது குற்றவாளியான ரஷீத் என்ற முகமது ஷபி, கேரள தம்பதிக்கு பல ஆலோசனைகளை கூறி தன்வசியப்படுத்தி வைத்து உள்ளார்.

நரபலி கொடுக்கும்போது, பெண்களின் ரத்தம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை கண்டு ஷபி பரவசமடைந்து உள்ளார். விசாரணையின்போது, குற்றவாளியான லைலா எந்தவித அச்ச உணர்வும், நடுக்கமும் இன்றி காணப்பட்டு உள்ளார். நரபலி கொடுத்த பின்னர் வெற்றி வரும் என நினைத்துள்ள அந்த தம்பதி தினசரி பூஜையிலும் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக வீட்டில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இதில், ஒரு கட்டத்தில் பக்வால் சிங்கின் மனைவியுடன் ஷபி பாலியல் உறவு வைத்து உள்ளார். இதனை பார்த்த பின்னர், பக்வால் சிங் வழிபாடு நடத்தியுள்ளார். பூஜைகள் முடிந்து, விளக்கேற்றியதும், லைலா மற்றும் ஷபி இருவரும் பாலியல் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்த தம்பதியிடம், மனித கறியை உண்பது வாழ்நாளை நீட்டிக்கும் என ஷபி கூறியுள்ளார். இதனை கேட்டு, நரபலி கொடுத்த பின்னர் மனிதகறியை அவர்கள் உண்டுள்ளனர். இதில், ரோஸ்லின் உடலில் இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள கறியை துண்டாக்கி லைலா உண்டுள்ளார். இதனை ஷபி கூறியுள்ளார்.

இதுபற்றி லைலாவிடம் விசாரித்தபோது, இளமை பொலிவு நீடிக்க பத்மாவின் பிறப்புறுப்புக்களை பக்வால் சிங் உட்கொண்டார் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். இரு பெண்களின் உடலின் பாகங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த சம்பவத்தில் அறிவியல் பரிசோதனைகள், மரபணு பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதில் ரூ.10 லட்சம் தரப்படும் என வாக்குறுதி கூறி, அழைத்து வரப்பட்ட ரோஸ்லினை படுக்கையில் நிர்வாண நிலையில் கால்களை கட்டி போட்ட நிலையிலும் கூட, தன்னை நடிக்க வைக்கிறார்கள் என அவர் நினைத்து உள்ளார். கேரள தம்பதி உள்ளிட்ட குற்றவாளிகள் 3 பேரும் நிர்வாண வழிபாட்டிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கில் வெளியில் கூற முடியாத அளவுக்கு பல கொடூர செயல்களில் ஷபியின் அறிவுரையின்பேரில், தம்பதி ஈடுபட்டு உள்ளனர் என கொச்சி நகர காவல் ஆணையாளர் சகிலம் கூறியுள்ளார்.

இவ்வளவு நடந்த பின்பும், செல்வம், பணம் வராத நிலையில், இன்னும் கூடுதலாக நரபலி கொடுக்க தயாரான, இரக்கமற்ற நிலையிலேயே லைலா காணப்பட்டு உள்ளார் என்றும் கூறி போலீசார் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளனர். ஏனெனில், கடந்த ஜூனில், இதே கேரள தம்பதி அவர்களது வீட்டில் வைத்து மற்றொரு பெண்ணையும் நரபலி கொடுத்து உள்ளனர் என புதுப்புது தகவல்களையும் போலீசார் கூறியுள்ளனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்